குமரி எஸ். நீலகண்டன் முதுநிலை அறிவிப்பாளர் (பணி நிறைவு) அகில இந்திய வானொலி, சென்னை.;
ஜூன் மாதம் என்பது பொதுவாக பள்ளிகள் திறக்கும் காலம். புத்தாண்டினைப் போல் புதுக் கனவுகள் பிறக்கும் காலம். நீண்ட கோடை விடுமுறைக்குப் பின் தன் அன்றாடப் பணிகளுக்காய் அகலமாய் கதவுகள் திறக்கும் காலமிது. முன்பெல்லாம் கோடை விடுமுறையில் பெரு நகரங்களைப் பார்க்கச் சென்ற கிராமத்துக் குடும்பங்கள் கிராமம் திரும்புவார்கள். தன் பிறந்து வளர்ந்த கிராமங்களுக்குச் சென்ற நகரத்து வாசிகள் நகரங்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பார்கள். கிராமத்திற்குச் சென்ற நகரத்துக் குழந்தைகளெல்லாம், ஆடு மாடுகள், கோழிகள், நாரைகள், பூனைகள், பறவைகள், தூக்கணாங்குருவிக் கூடுகள், குருவிகள், குயில்கள், வயல்கள், பசுந் தாவரங்கள், மரங்கள், ஊஞ்சல்கள், கலப்பைகள், வைக்கோல் பந்தல்கள், ஆறுகள், குளங்கள், மீன்கள், ஏர் கலப்பைகள், பாறைகள், மலைகள் எல்லாவற்றையும் பார்த்து மனதெல்லாம் கிராமத்தை நிறைத்து வைத்திருப்பர்;
