குமரி எஸ். நீலகண்டன் முதுநிலை அறிவிப்பாளர் (பணி நிறைவு) அகில இந்திய வானொலி, சென்னை.;
”முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்” என்று பாரதி அன்று பாடினான். இன்று அவன் இருந்தால் 143 கோடி முகமுடையாள் என்றுதான் பாடியிருப்பான். மக்கள் தொகையோ அன்றைய 30 கோடியிலிருந்து இன்று 143 கோடிக்கு மேலாகிப் போனது. பாரதியின் மொய்ம்பு என்ற வார்த்தைக்கு உயர்வு, பெருமிதம் என்று பல பொருள்கள் உள்ளன. ஆனால் பாரதியின் அந்த உயர்ந்த கனவு நிலைக்கு ஒப்பாக, 143 கோடி மக்களிடமும் ஒரே சிந்தனையாக இன்று இருக்கின்றதா என்றால் நிச்சயமாக அதற்கான பதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். மொழிகள் பலவாயின. சிந்தனைகளும் இன்று பலவாயின. அன்று ஒரே சிந்தனையுடன் அவரவர் மொழிகள் பலவாக இருந்தாலும் வலுவாய் இருந்தன. மொழியையும் சிதைத்து அதை வைத்தே சுய நலத்திற்காக மக்களையும் பிரிக்கும் மனநிலை இன்று பரவலாக சமூக நோயாக மாறி விட்டது.;
