ஜெனோ மோகன், சமூகச் செயல்பாட்டாளர்;
மழை, பெருமழை, வெள்ளம், புயல், சுனாமி இத்தகைய எவ்விதமான இயற்கைப் பேரிடராக இருந்தாலும் மக்கள் பணியில் முன்களப் பணியாளர்களாக முன்வரிசையில் நிற்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள் அல்லது தூய்மைக் காவலர்கள். இவர்கள் தான் நகரையும் நம் வாழ்வினையும் பளிச்சென வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வு பிரகாசமில்லை என்பதுதான் வேதனை. தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தவரையில், அரசு நிர்வாகத்தின் அடிப்படையில் கிராமப்புற அல்லது பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பெருமாநகராட்சிப் பணியாளர்கள் என பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறார்கள்;. தமிழகத்தில் இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்றவாறு பணியும், பணிநேரமும், ஊதியமும் வேறுபடுகிறது. குறிப்பாக கிராமப்புற துப்புரவுப் பணியாளர்கள் முழு நேரமாகப் பணிபுரிந்தாலும் அவர்கள் பகுதி நேரப் பணியாளர்களாகவே கருதப்படுகிறார்கள். நகராட்சி, மாநகராட்சி மற்றும் பெருமாநகராட்சிப் பணியாளர்களைப் பொறுத்தமட்டில் 100 சதவிகிதம் இன்று தனியார்மயமாக ஆக்கப்பட்டிருக்கிறது. 2022 அக்டோபர் மாதம் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மூலமாக இனிமேல் தூய்மைப் பணிக்கு அரசுசார்பில் பணியமர்த்தப்பட மாட்டாது என உறுதியாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தனியார்மயமாக்கப்பட்டு விட்டது.;