அழ. சோமசுந்தரம்;
களஞ்சியம் வெறும் கடன் கொடுத்து வாங்கும் வங்கியின் வேலையை மட்டும் செய்யவில்லை. களஞ்சிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்னையாய், தந்தையாய், ஆசானாய், உற்றுழி உதவும் நண்பனாய், வேண்டிய ஆலோசனை கூறும் அமைச்சனாய் இருந்து வருகிறது என்பது களஞ்சிய உறுப்பினர்களின் வாய் மொழிகளாலேயே அறிய முடிகிறது. இவர் தனலட்சுமி. இவர் பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் குடவாசல். ஆறு சகோதரிகள் உள்ள பெரிய குடும்பத்தில் ஐந்தாவது மகளாகப் பிறந்தவர். இவர் தந்தையார், குடவாசலில் ஒரு டீக்கடை வைத்திருந்தார். அப்பாவுக்கு உதவியாக அதில் வேலை பார்த்துவந்தார் தனலட்சுமி. குடும்ப சூழல் காரணமாக இவரது கல்வி ஐந்தாவது வகுப்போடு நிறைவுக்கு வந்தது.. தையல் பயிற்சியில் சிறு வயதிலேயே ஆர்வம் இருந்ததால் தையல் கற்றுக் கொண்டார்.;
