வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமதுமண்வாசம்;
எனது முதலாமாண்டு கல்லூரிப் படிப்பின்போது நிகழ்ந்த அனுபவம் அது. எங்களது மண்ணியல் துறை பேராசிரியர் முனைவர் சிங்காரம் மிகவும் கண்டிப்பானவர். அவர் மாணவர்களை இரண்டு விதமாக வகைப்படுத்துவார். சிலரை குழந்தைத்தனம் மிக்கவர்கள் என்று அடிக்கடி சாடுவார், சிலரை குழந்தை மனம் கொண்டவர்கள் என்று பெருமளவு புகழ்வார். அந்த வயதில்எங்களுக்கு இரண்டும் ஏறக்குறைய ஒன்றுபோலத்தான் தெரிந்தது. பிறகு ஏன் பேராசிரியர் சிலரை சாடுகிறார்? சிலரை புகழ்கிறார்? என்ற குழப்பம் எங்களுக்குள் வந்ததுண்டு.. தைரியத்தை வளர்த்துக் கொண்டு இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று ஒருமுறை துணிந்து அவரிடம் கேட்டுவிட்டோம். அவர் கூறிய விளக்கம் சற்று எங்களைச் சிந்திக்க வைத்தது. இரண்டிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிய வைத்தது. தரமான பாதை எது எனத் தெரிய வைத்தது. குழந்தைத்தனம் என்பது பக்குவமற்ற, விளையாட்டுத் தனமான, பிறர் முகம் சுளிக்கக் கூடிய வகையிலான நடத்தை. மாறாகக் குழந்தை மனம் என்பது தூய்மை, நேர்மை, ஆர்வம், பாசம் உள்ளிட்ட பண்புகள் பொருந்திய அணுகுமுறை.;
