குமரி எஸ். நீலகண்டன் முதுநிலை அறிவிப்பாளர் (பணி நிறைவு) அகில இந்திய வானொலி, சென்னை. ;
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி. வழக்கம் போல் பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. கிராமம், நகரம், மாநகரமென நாடெங்கும் விழாக் கோலம் பூண்டிருக்கும். கோடிக் கணக்கான காந்தியின் உருவப் படங்கள் காங்கிரஸ் கொடியுடன் நாடு முழுக்க ஒட்டப் பட்டிருக்கும். இணைய தளம் முழுக்க காந்தியைப் பற்றிய சிந்தனைகள் வெள்ளமாய் பாயும். அலைபேசியின் குறுஞ்செய்திகளெல்லாம் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்களாய் குவியும். சில தொலைக்காட்சிகளில் காந்தியைப் பற்றிய திரைப்படம் ஓடும். வானொலியில் காந்திய சிந்தனைகள் பற்றிய உரைகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். காந்தி உயிரோடு வந்தால் இதையெல்லாம் பார்த்து கூனிக் குறுகி எங்கோ போய் ஒளிந்து கொள்வார். வணிகமயமான இந்த உலகில் காந்தியும் ஒரு வர்த்தகப் பொருள். காந்தியைப் பேசி பேசி பணம் பெறுபவர்கள் ஒருபுறம் இருக்க, காந்தியின் எளிமையை உலகிற்கு பரப்ப லட்சங்களில் பணம் செலவழித்து ஆடம்பரமாய் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அரங்குகளில் கருத்தரங்கங்கள் நடக்கும். பல்வேறு தலைப்புகளில் கவியரங்கங்கள் நடக்கும். கம்பூன்றியவன், மொட்டைத் தலையன், கிழவன் என பல்வேறு வார்த்தைகள் உரிமையுடன் பிரயோகிக்கப்படும்.;
