குமரி எஸ்.நீலகண்டன் முதுநிலை அறிவிப்பாளர் (பணிநிறைவு)” அகில இந்திய வானொலி, சென்னை. ;
ஐம்பது வருடங்களுக்கு முன்பு நான் வசித்த வீட்டினருகே ஒரு லேத் பட்டறை இருந்தது. அதன் உரிமையாளர் பெயர் சுப்பையா ஆசாரி. அப்போதே அவர் மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். அவர் தமிழகத்தில் பல அணைக்கட்டுகள் கட்டுமானத்திலும் பல முக்கிய பணிகளைச் செய்தவர். ஒவ்வொரு ஆயுத பூஜை அன்றும் ஒருவர் வந்து அவரை மிகுந்த மரியாதையுடன் அழைத்துச் செல்வார். வந்தவர் சுப்பையா ஆசாரியிடம் தொழில் கற்று தனது பட்டறையை திறம்பட நடத்தி வருபவர். தனது குருவிற்கு நன்றியும் மரியாதையும் செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆயுத பூஜை நாளன்றும் சுப்பையா ஆசாரியை தனது பட்டறைக்கு அழைத்துச் சென்று அவர் முன்னிலையிலேயே தனது ஆயுதங்களுக்கும் கடவுளுக்கும் பூஜை செய்து அவரின் ஆசியையும் அன்பையும் பெற்று அவருக்கு மரியாதை செலுத்துவார். அதுதான் குரு பக்தி.;
