டாக்டர் எஸ்.வடிவேல் முருகன், முதல்வர் (பணிநிறைவு), கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி.;
ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தால் உலக சுகாதார தினம் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகசுகாதார நிறுவனம் 1948இல் நிறுவப்பட்டது. இது, உடல் நலம் ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படை உரிமை என்ற உன்னதமான உயரிய நோக்கினைக் கொண்டது. உலக நாடுகளையும், பல்வேறு சுகாதார அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து, குழந்தை தாயின் வயிற்றில் உருவாவது துவங்கி, மூத்த குடிமக்களின் உடல் நலம் பேணுவது வரை இதன் பணி தொடர்கிறது. உலகளாவிய வகையில் தொற்று நோய்கள் மனிதர்களைத் தாக்கும் போது, பல்வேறு மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் போன்றோரை ஒருங்கிணைத்து அந்த தொற்று நோய்களின் தாக்குதலிலிருந்து மனித குலத்தைப் பாதுகாக்கும் முக்கிய பணியினையும் இது மேற்கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருபொருளை மையப்படுத்தி உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆரோக்கியமான துவக்கம் மற்றும் நம்பிக்கை மிகுந்த எதிர்காலம் (Healthy beginning and hopeful future) என்பதாகும்.;
