தர்ஷனா ஸ்ரீ (7-ஆம் வகுப்பு) ஸ்ரீ வித்யா, களஞ்சியம் மாலைநேர பள்ளி ஆசிரியை, பங்களாப்பட்டி, திண்டுக்கல். ;
எங்கள் வீடு கடற்கரைக்கு அருகில் இருக்கிறது. அன்று நல்ல மழை பெய்தது. பள்ளிக்கும் விடுமுறை என்பதால் நானும் தம்பியும் மகிழ்ச்சியாக இருந்தோம். எங்கள் வீடு, ஒரு ஓட்டு வீடு. வீட்டுக் கூரையில் பெய்த மழை தரையில் விழுந்து, சிறிய ஓடையைப் போல் வழிந்து ஓடியது. நானும் தம்பியும் வாசலில் நின்று அதைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். சட்டென்று, இதில் கப்பல் விடலாமே! என்று எனக்குத் தோன்றியது. உடனே தம்பியிடம் சொன்னேன். அவனும் செய்யலாம் என்றான். நாங்கள் பள்ளிப் பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து, தாள் ஒன்றைக்கிழித்து கப்பல் செய்தோம். சின்ன கப்பல்தான். தம்பி செய்த கப்பல் கொஞ்சம் பெரியதாக இருந்தது. அதை வாசலில் ஓடும் ஓடையில் விட்டோம். யாருடைய கப்பல் தூரமாகப் போகும் என்று பார்த்துக் கொண்டே இருந்தோம். எங்கள் கப்பல் கொஞ்ச தூரம் சென்றதுமே முட்டிக்கொண்டு நின்றுவிட்டது; மழையில் நனைந்து கவிழ்ந்துவிட்டது. ஆனாலும் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.;