ஏ.சாந்தி பிரபு வங்கி அதிகாரி குரும்பூர், தூத்துக்குடி.;
மாதாகோவில் நூற்றாண்டு சிறப்பு பத்துநாள் திருவிழாவின் முதல் நாள், பொருட்காட்சி திடலில் ஜாதி, மதம், ஏழை பணக்காரன் என்ற எந்தவொரு பேதமும் இல்லாமல் ஊரே குதூகுலமாகக் கூடியிருந்தது. பஞ்சுமிட்டாய் பஞ்சுமிட்டாய் என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருப்பவர்கள், பாப்கார்ன் விற்பவர்கள், சூடான டெல்லி அப்பளம் தயார் என்று பலகை போட்டு அமர்ந்து கொண்டு, கம கம வாசத்துடன் மொறு மொறு அப்பளங்களை பொறித்து, தட்டில் அடுக்கி வைப்பவர்கள், கமறும் அந்த எண்ணெய் வாசனை, ஓலைப் பெட்டியில் ஜிலேபியை வாங்கிச் செல்பவர்கள், பச்சைக் குத்திக் கொள்பவர்கள், கையில் மெகந்தி அலங்காரம் செய்பவர்கள் என ஒரு மினி வியாபார இடமாகவும் அந்த இடம் மாறியிருந்தது. குழந்தைகளை கவரும் விளையாட்டுப் பொருட்கள் கடையும், ராட்டினங்களும், பல்வேறு வேடிக்கை நிகழ்ச்சிகளும் பனி உலகம் எனப்படும் பனிக்கட்டிகளால் செய்யப்பட்ட வீடு போன்ற ஒரு அமைப்பும், அதனுள்ளே பொழுதுபோக்கிற்காக நடைபெற்ற பாட்டும் ஆட்டமும் கண்களுக்கும் செவிக்கும் விருந்தாக இருந்தன. ;