குமரி எஸ். நீலகண்டன் முதுநிலை அறிவிப்பாளர் (பணி நிறைவு) அகில இந்திய வானொலி, சென்னை.;
ஆங்கில எழுத்து ஏ யில் துவங்குகிறது ஏப்ரல் எனும் மாதப்பெயர். தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமும் ஏப்ரல் மாதத்தில் சித்திரையாய் வருகிறது. குளிர் வசந்தத்துள் புகுந்து கோடையாய் எழும் தருணம் இது. மாமரம் பூத்து பிஞ்சாய் விளைகிறக் காலமிது. மாம்பூக்களையும் காணலாம். மாம்பிஞ்சுகளையும் காணலாம். சென்ற கோடையில் தயாரித்த மாம்பிஞ்சு ஊறுகாய்கள், ஆவக்காய் ஊறுகாய்களெல்லாம் பீங்கான் பரணிகளில் வேறும் உப்புச் சாறுகளாய் அடி தட்டும் காலமிது. பெண்களெல்லாம் அந்தப் பரணிகளைக் கழுவி பிஞ்சு மாங்காய்களை வாங்கி ஆசை ஆசையாய் அடுத்த வருடத்திற்கான ஆவக்காய் ஊறுகாய்களைத் தயார் செய்யும் காலம். அந்த ஊறுகாய்கள் சென்னைக்கு பயணிக்கலாம். அமெரிக்கா உட்பட்ட உலக நாட்டின் ஏதோவொரு மூலையிலிருக்கிற தனது ஆசைப் பிள்ளைகளுக்காகவும் இருக்கலாம். வெளி நாட்டில் வசிக்கும் பிள்ளைகள் அந்த ஊறுகாயைச் சுவைக்கிற போது அந்த ஊறுகாயின் உப்பின் உவர்ப்பு சொந்த மண்ணில் தனியாய் தவிக்கும் பெற்றோரின் கண்ணீரின் உவர்ப்புக்கு ஈடாக இருக்கலாம். ஊறுகாய்க்காக உதிர்ந்த மாம் பிஞ்சுகளிலிருந்து தப்பித்து பிழைத்தவை கனிகளாகும் அடுத்து வரும் மாதங்களில். ;
