வீ. வெங்கடேசன், வெளியீட்டாளர், நமது மண்வாசம் ;
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரான பி.வி. சிந்து, உலக அரங்கில் பல வெற்றிகளைப் பெற்றவர். ஆனால் அந்த வெற்றிகளுக்குப் பின்னால் எண்ணற்ற தோல்விகளும் கடுமையான போராட்டங்களும் இருந்தன. குறிப்பாக, உலக அளவிலான பல போட்டிகளில் இறுதிச் சுற்று வரை முன்னேறியும், வெற்றிக் கோட்டைத் தொடும் தருவாயில் வெற்றி நழுவிப் போனது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு மிக அருகில் இருந்தும், இறுதியில் வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பினார். அதன்பிறகும் பல சர்வதேச இறுதிப் போட்டிகளில் தோல்வி அவரைத் துரத்தியது. இறுதிப் போட்டியில் வெல்ல முடியாத வீராங்கனை என்ற விமர்சனங்களும் அவரைச் சுற்றி எழுந்தன. பலருக்கு அந்தத் தொடர்ச்சியான தோல்விகளே பயணத்தின் முடிவாக மாறியிருக்கும். ஆனால், பி.வி. சிந்து அப்படிச் சிந்திக்கவில்லை.;