பேராசிரியர் பெ. விஜயகுமார்;
தமிழ் நாடக இலக்கியத்துக்கு இந்திரா பார்த்தசாரதியின் கொடை அளப்பரியது. சமூகம், வரலாறு, தொன்மம் என்று அனைத்து நாடக வகைமைகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரின் ’ஔரங்கசீப்’, ‘ராமாநுஜர்’ இரண்டும் பெரும் வெற்றி பெற்றுள்ள வரலாற்று நாடகங்கள். ஒன்று மதத்தில் புரட்சி செய்த மகான் ராமாநுஜரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்துகிறது. மற்றொன்று மொகலாயப் பேரரசன் ஔரங்கசீப்பின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் சித்தரிக்கிறது. திரைப்படக் கலையின் வருகையினால் மிகவும் பாதிப்புக்குள்ளானது நாடகக் கலையாகும். தமிழ் நாடகக் கலையை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு சில நாடகாசிரியர்களுள் முக்கியமானவர் இந்திரா பார்த்தசாரதி. ;
