சேக் நபி தலைமையாசிரியர், அல்அமீன் மேல்நிலைப் பள்ளி, மதுரை ;
இளமையிலேயே வியத்தகு நினைவாற்றலும் அறிவுத்திறமும் கொண்டவர். கற்ற இலக்கியங்கள் அனைத்தையும் கற்றவாறே வெளிப்படுத்தும் திறமையும் ஆற்றலும்மிக்கவர் மகாமதி செய்குத்தம்பி. கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு அடுத்த இடலாக்குடியில் (1874) பிறந்தார். அப்போது அந்தப் பகுதி, திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால் பள்ளிகளில் மலையாளமே பயிற்றுமொழியாக இருந்தது. இவரும் மலையாளத்திலேயே பள்ளிக்கல்வியை முடித்தார். சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்று, இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, ஐம்பெரும் காப்பியங்கள், திருக்குறள், தொல்காப்பியம் என அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். அவற்றில் நினைவுத் திறன் பெற்றிருந்தார். அந்தாதியாகவும், சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலையை கைவரப் பெற்றார். முதன்முதலாக ஸ்ரீ பத்மவிலாசப் பதிப்பகத்தில் பிழை திருத்தும் புலவராகப் பணியமர்ந்தார். அப்போது, சீறாப்புராணத்துக்கு உரையெழுதி பதிப்பித்தார். ;