கே.பி. பாரதி மேம்பாட்டு சுற்றுலா ஆர்வலர்;
நமது பண்டைய கண்மாய், ஏரி, குளங்களில் அமைக்கப்பட்ட கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் நீர்நிலைப் பாதுகாப்பையும், முறையான பாசன முறைகளையும் வழியுறுத்தி உள்ளதாகத் தொல்லியல் நிபுணர் முனைவர் வேதாசலம் கூறுகின்றார். நமது முன்னோர்கள் நீர் நிலைகளான குளம், ஊருணி, ஆறு முதலியவற்றைப் போற்றிப் பேணிக்காத்து வந்துள்ளனர். ஆறுகளைப் பெண் தெய்வங்களாக மக்கள் கருதி, குளங்களைத் தெய்வங்கள் காப்பதாக நம்பினர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியப் பாடலில் நீர் இல்லாமல் இவ்வுலகம் இருக்க முடியாது (நீரின்றி அமையாது உலகு) என்று கூறப்பட்டுள்ளது. நீர்நிலைகளைத் தோற்றுவித்துப் பாதுகாக்க வேண்டும் என்று அரசனை புலவர்கள் வேண்டிக் கொண்டனர். முறையான வகையில் நீர்நிலைகளைப் பாதுகாப்பவர்கள், புணரமைப்பவர்களின் கால்களை எங்கள் தலைமீது தாங்குவோம் என்று அரசர்கள் கல்வெட்டுகளில் எழுதி வைத்துள்ளனர்.;