மீ. ராமசுப்பிரமணியன், பத்திரிகையாளர்;
கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் ஓரளவுக்கு பெரிய ஊர் அது. பேரூராட்சி அந்தஸ்தை பெற்றிருந்த அந்த ஊரில் மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம் போன்ற அடிப்படை வசதிகளும் இருந்தன. இந்த ஊரில்தான் மளிகை நடத்தி வந்தார் கந்தசாமி. கொஞ்சம் பெரிய கடை. அந்த ஊரை சொந்த ஊராகக் கொண்டவர் என்பதால் நன்றாக வியாபாரம் நடந்து கொண்டிந்தது. நியாயமான விலை என்பதோடு, ஆள் அறிந்து கடனுக்கும் பொருட்கள் கொடுத்து வந்தார் கந்தசாமி. அவருக்கும் ஊரில் வயல், தென்னந்தோப்பு, சொந்த வீடு என வசதிகள் இருந்தன. இணக்கமான, இவரது பேச்சு இவருக்கு நல்ல பெயரை தந்திருந்தது. கோயில் திருவிழா, பள்ளி ஆண்டுவிழா போன்ற பொது நிகழ்வுகளில் இவரது நிதிபங்களிப்பும் இருக்கும்.;