டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை ;
ஸ்க்ரப் டைபஸ் என்ற காய்ச்சல் ஆசியா-பசிபிக் பகுதியில் ஒரு தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஸ்க்ரப் டைஃபஸ் என்னும் தொற்றால் தமிழகத்தில் ஐந்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என இம்மாதத்தின் முதல் வாரத்தில் நாளிதழ்களில் செய்தி வெளியாயின. ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒருவகை ஒட்டுண்ணிக் கடியால் பரவும் காய்ச்சலாகும். ஓரியன்சியா சுட்சுகாமுஷி (கண்டறிந்தவர் ஒரு ஜப்பானியர் என்பதால் அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது) எனும் பாக்டீரியா டிக் மைட்ஸ் எனும் உன்னிகளில் தொற்றை ஏற்படுத்துகின்றது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக இந்த பாக்டீரியா காணப்பட்டாலும் கிழக்கே பாகிஸ்தான், மேற்கே ஜப்பான், தெற்கே ஆஸ்திரேலியா இந்த மூன்று நாடுகளை மூன்று புள்ளிகளாகக் கொண்டு முக்கோணம் வரைந்தால் அது சுட்சுகாமுஷி முக்கோணம் என்றழைக்கப்படுகிறது. இந்த முக்கோணம் இருக்கும் பகுதியில் சுமார் நூறு கோடி மக்கள் ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து பகுதிக்குள் வருகிறார்கள் . வருடந்தோறும் இந்தப் பகுதியில் வாழும் பத்து லட்சம் பேருக்கு ஸ்க்ரப் டைஃபஸ் நோய் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் அறிகுறியில் நான்கில் ஒன்று ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலாக இருக்கிறது. ;