கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர்;
ஏறுதழுவுதல் மரபுவழி விளையாட்டு. தமிழ்நாடு முழுமையும் பழங்காலம் தொடர்ந்து வழக்கத்திலிருந்து வருகிறது. காளைகளுக்கும் தமிழர்களுக்குமான உறவு தொன்மையானது. காளை என்பது தமிழர் வரலாற்றில், இறைச் சின்னமாகவும் உற்பத்திப் பெருக்கத்தின் அடையாளமாகவும் ஒருசேர பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஏறுதழுவல் எனும் விளையாட்டின் வழியாகப் பல நூறு காளை இனங்கள் பாதுகாக்கப்பட்டன. இன்று “ஜல்லிக்கட்டு” என்று பரவலாக அறியப்படும் விளையாட்டிற்கு ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல், ஏறுகோடல், எருதுவிடும் விழா, வடமாடு பிடித்தல், எருதாட்டம், சலங்கைகூட்டு, ஊர்மாடு அவிழ்த்துவிடுதல் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றது. தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு ஆண்டுதோறும் தை மாதத்தில், பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுகிறது.;