வழக்கறிஞர் எஸ். செல்வகோமதி, தலைவர், நீதிபதி சிவராஜ் பாட்டீல் பவுண்டேஷன்;
தேசிய அளவில் பார்த்தோமேயானால் கிராமப்புறப் பெண்களின் நிலை ஆரோக்கியமானதாக இல்லை. சமீபத்தில் கூட ஒரு பதபதைக்கும் செய்தியைப் பார்த்திருப்போம். ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்த பிரேமராம் (வயது 32). ஒருநாள் மதுபோதையில் தனது மனைவியின் கைகளைப் பைக்கின் பின்புறம் கட்டி பைக்கை ஓட்டிச்செல்ல, அவரது மனைவி தரையில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டார். என்ன கொடுமை இது? கிராமப்புறங்களில் பாலின ஏற்றத்தாழ்வு, பெண்களுக்கு நிதி ஒதுக்கல் மற்றும் கல்வி வாய்ப்புகள் இல்லாமை, மருத்துவம், சுகாதார வசதிகள் மற்றும் பல பிரச்சனைகள் இன்றும் தொடர்கின்றன. கிராமப்புற இந்திய பெண்களில் கணிசமானோர் தங்களது வாழ்க்கையில் விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியை தண்ணீர் எடுப்பது, விறகு பொறுக்குவது, கால்நடை தீவனங்கள் சேகரிப்பது ஆகியவற்றுக்காகச் செலவழிக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இதைத் தாண்டியும் குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்கும், பணிவிடை செய்யும் வேலைகளையும் செய்கின்றனர். லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களின் இயக்கம் பெரும்பாலும் இவர்களின் உழைப்பையே சார்ந்துள்ளது.;