வழக்கறிஞர் பா.ஹேமாவதி சென்னை உயர்நீதிமன்றம்;
25 ஆண்டுகளுக்கு முன், பள்ளிப் பருவம் என்றாலும் நன்றாக நினைவிருக்கிறது, அம்மாவைப் பார்ப்பதற்காக அவருடைய அலுவலகத்தில் காத்திருந்த நேரம். அப்போது ஒரு கூட்டமாகத் தாத்தாக்களும் பாட்டிகளும் அம்மாவைக் காண வந்தனர். அவர்களது கைகளில் பூ, பழம் இவற்றோடு இனிப்பு, பலக்காரம் என பல வகைகளில் திண்பண்டங்கள்! அவற்றைப் பார்த்தவுடன் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. வீட்டுக்கு செல்வதற்குள் என்னால் இயன்றவரை தின்று முடித்துவிட வேண்டும். வீட்டுக்குப் போனால் இரண்டு அண்ணன்களோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கும் என்ற சிந்தனையில் இருந்த என் காதுகளில் அந்தப் பெரியவர்கள் அம்மாவிடம் பேசிய சில வார்த்தைகள் ஒலித்தன. பல வருசமா முதியோர் பென்ஷன் வாங்க ஆஃபீஸ் வாசல் ஏறி ஏறி கால் மரத்துப் போன எங்களுக்கு உங்க முயற்சியாலதான் அது கிடைச்சது. நீங்களும் உங்க குடும்பமும் பல்லாண்டு காலம் நல்லா வாழணும்.;