கே.பி.பாரதி வளர்ச்சிக்கான சுற்றுலா ஆர்வலர்;
நாகரிகமும் பண்பாடும் நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், மொழிக்கு மொழி மாறுபடுகிறது. வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே மனிதப் பண்பு. மாறும் இந்த உலகில் சுற்றுலாவின் மூலமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டாகும். அதுவே வளர்ச்சியினைச் மேம்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள 27 நாடுகளில், 1.8 கோடி மக்கள் தொகை கொண்ட நெதர்லாண்டு நாடு சிறப்பானது என்பதை நாம் நன்கு அறிவோம். கடல் வணிகம், காற்றாலை, ஓவியம் வரைதல், பாரம்பரிய மரக்காலனிகளுக்கும் முக்கியமாகச் சமுதாயச் சமத்துவத்திற்கும் பெயர் பெற்று விளங்கும் சிறந்த நாடு நெதர்லாண்டு. இந்த நாட்டில் துலீப் மலர்கள் சாகுபடி இந்த நாட்டின் சிறப்பாகவும், துலீப் மலர்களை முன்னிலைப்படுத்தி, தங்களது அடையாளமாகக் கொண்டாடுவது பற்றி உலகம் நன்கு அறியும். உலகிலேயே மிக அதிகமாக ஏறக்குறைய 99 சதவிகிதக் குடிமக்கள் தனக்கென்று மிதிவண்டி வைத்துக்கொண்டு பயன்படுத்துவது மிகவும் பாராட்டுக்குரியது சுத்தம் பேணுதலையும், இயற்கை சூழ்நிலைகளைப் பராமரிப்பதில் முக்கியக் கவனம் செலுத்துவதை இந்நாட்டினர் தங்களது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.;