கோ. கமலா ஆசிரியை;
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் வேங்கடசாமி ஐயர்-லட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு முதல் மகனாக ஜனவரி 22, 1929 அன்று பிறந்தார் தி.வே. கோபாலையர். உடன்பிறந்தவர்கள் 4 தம்பியர், 2 தங்கைகள். கோபாலையர் மன்னார்குடியில் சரஸ்வதி அம்மாள் பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார். 1940இல் சென்ட்ரல் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்தார். 1945இல் தமிழ் வித்துவான் தேர்வில் முதலிடம் வந்து ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றார். 1951இல் பி.ஓ.எல். பட்டம் பெற்றார். 1953இல் பண்டிதம் தேறினார். 1958இல் பி.ஓ.எல். (ஆனர்சு) முதல் தகுதி பெற்று அரங்கையா செட்டியார் பரிசைப் பெற்றவர். 15 ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளியிலும் 15 ஆண்டுகள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தவர். சாதாரணப் பள்ளி ஆசிரியராய்ச் சேர்ந்து திருவையாறு அரசர் கல்லூரி முதல்வராக உயர்ந்து, புதுவை பிரெஞ்சு இந்தியவியல் கலை நிறுவனத்தில் மதிப்புறு பேராசிரியராகப் பணிபுரிந்தார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இவர் பணிபுரிந்த போது மிகச்சிறந்த தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர். உலகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் பலர் இவரிடம் தமிழ் கற்றனர். ;