மயிலப்பன், ஒலிபரப்பு நிர்வாகி, அகில இந்திய வானொலி நிலையம், மதுரை;
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை மெய்யாக்கும் ஒரு மார்க்கமாக வானொலி திகழ்கிறது. தலையாய செல்வமான செவிச்செல்வத்தைப் பெறுவதற்கு நன்கு கூர்ந்து கேட்கும் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம் அது வானொலியினால் சாத்தியமாகும். இதோ ஒரு சோதனை, வாசிப்பதை நிறுத்தங்கள்! உங்கள் குழந்தையை அல்லது வாழ்க்கைத் துணையைப் பெயரைச் சொல்லி அழையுங்கள் நீங்கள் அழைப்பது கவனியாது இருக்கலாம். இதற்குக் காரணம் அவர்கள் செவி கூர்ந்து கேட்கப் பழகாது இருப்பதுவே. வானொலி ஒன்றை வாங்கி வைத்துக் கேளுங்கள் ஒரு மாதம் கழித்து இதே சோதனையைச் செய்யுங்கள் மாற்றம் நிச்சயம் புலப்படும். எங்கே கிளம்பிவிட்டீர்கள் நமக்கு நாமே ஒரு வானொலியைப் பரிசளித்துக் கொள்வோம். பேரிடர் காலத்தில் மட்டுமல்ல அனைத்துக் காலங்களிலும் உற்ற நண்பனாய் இருப்பான் வானொலி;